கருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படையினர், அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்பதை உணர்த்துவதாக அமையும் என ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் போரின் தொடக்க நாள்களிலேயே ஸ்னேக் தீவை ரஷியா கைப்பற்றியது. கருங்கடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவில், ரஷியா தனது தொலைதூர வான்பாதுகாப்பு தளவாடங்களை நிறுவி வலிமையான ராணுவ நிலையை ஏற்படுத்தியிருந்தால் தெற்கு உக்ரைன், வட மேற்கு கருங்கடல் பகுதி என அந்தப் பிராந்தியத்தின் வான், கடல் மற்றும் தரை எல்லைகளை ரஷ்யாவால் தனது பிடிக்குள் கொண்டு வந்திருக்க முடியும். எனினும், அந்தத் தீவை தற்போது ரஷ்யா கைவிட்டதால் அது மீண்டும் உக்ரைன் இராணுவத்தின் வசம் வந்துள்ளது.
ஆனால், ஸ்னேக் தீவுக்கு தளவாடங்கள், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லும் படகுகள் மீது உக்ரைன் படையின் ஏவுகணைகள் மூலமும் ஆளில்லா விமானம் மூலம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்ததால், அந்தத் தீவை தொடர்ந்து தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமான காரியமாக இருந்ததால்தான் அங்கிருந்து ரஷ்யப் படை பின்வாங்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில், டொனட்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் இராணுவத்தின் வசமிருக்கும் கடைசி நகரான சிலிசான்ஸ்கை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.