ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது.
உலகெங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையானது, 14 தளங்களில் 5,400 அமைதிப்படையினர் கடமையாற்றி வருவதோடு அதில் எட்டுப்பகுதிகள் சவாலுக்குரியவையாக உள்ளன.
உலக அமைதியின் நலனுக்காகவும், மக்கள் ஆணையைப் பாதுகாப்பதற்காகவும் செயற்படும் ஐ.நா.அமைதிப்படைகளில் இந்திய இராணுவக் குழுக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதனால் இந்திய அமைதி காக்கும் படையினரின் தொழில்முறை மற்றும் துணிச்சலான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொங்கோ, லெபனான், தெற்குசூடான், கோலன் ஹைட்ஸ், சிரியா, மேற்கு சஹாரா, அபேய் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் இந்திய இராணுவம் அதிகளவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அத்துடன், ஐ.நா.வின் இடைக்காலப் பாதுகாப்புப் படையில் காலாட்படை பட்டாலியன் குழுவையும் இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்தியா இதுவரை 15படைத் தளபதிகள், இரண்டு இராணுவ ஆலோசகர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கான துணை இராணுவ ஆலோசகர், இரண்டு பிரிவுகளின் தளபதிகள் மற்றும் எட்டு துணைப் படைத்தளபதிகளை ஐ.நா.பணிகளுக்காக அமர்த்தியுள்ளது.
இந்நிலையில், ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், தெற்கு சூடானின் தளபதியாக இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் மோகன் சுப்ரமணியனை நியமித்துள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணியன், இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் தினைகருக்குப் பின்னர் பதவியேற்றுள்ள நிலையில், ‘படைத்தளபதியாக அவரது அயராத அர்ப்பணிப்பு, விலைமதிப்பற்ற சேவை மற்றும் திறமையான தலைமைக்கு நன்றி கூறுகிறேன்’ என்று ஐ.நா.செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணியன் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருவதோடு, மிக அண்மையில், மத்திய இந்தியாவில் இராணுவப் பிராந்தியத்தின் தளபதியாகப் பணிபுரிந்தார், இராணுவத்தின் செயற்பாட்டு மற்றும் தளவாடத் தயார்நிலைக்கும் பங்களித்துள்ளார்.
முன்னதாக, அவர் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைந்த தலைமையகத்தில் கொள்முதல் மற்றும் உபகரண மேலாண்மைக்கான கூடுதல் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றியுள்ளதோடு, வேலைநிறுத்த காலாட்படைப் பிரிவின் பொது அதிகாரியாகவும், கட்டளை காலாட்படை பிரிவில் துணைப் பொது அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் 2000ஆம் ஆண்டில் சியரா லியோனில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் பணியாளர் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணியன் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைப் படிப்பில் இரண்டு முதுநிலை தத்துவப் பட்டங்களைப் பெற்றுள்ளதோடு, தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் சரளமாக பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.