ராஜபக்ஷ அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜே.வி.பியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா இதனை குறிப்பிட்டார்.
ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சி, அவர்கள் தேவைக்கு மீறிய சொத்துக்களை குவிக்க வழிவகுத்தது என அவர் சுட்டிக்காட்டினார்.
போராட்டத்தின் முடிவு குறித்து சிலர் சந்தேகம் கொண்டிருந்தாலும் வெற்றி கிடைத்துள்ளதாக டில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இராஜினாமாவினால் தற்போதுள்ள பிரச்சினைகள் தீரவில்லை என்றும் பொருளாதார நெருக்கடி, பொருட்களின் பற்றாக்குறை தொடர்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்னைகள் இன்னும் அதிகமாகவே உள்ளதாக டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் நிலவும் அரசியல் நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு சில கட்சிகள் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும், அரசியல் அமைப்புகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் டில்வின் சில்வா வலியுறுத்தினார்.
அத்தகைய நபர்களை ஆட்சிக்கு வர அனுமதித்தால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என டில்வின் சில்வா குறிப்பிட்டார்.