இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும் என்றும் ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் உரையாற்றிய அவர், 9 ஆம் திகதியென்பது, இலங்கையில் மாற்றங்கள் நிகழும் நாளாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.
பௌத்த பிக்குகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி, பௌத்த தேரர்களாலும், வாக்களித்த மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் இலங்கை அரசியல் வரலாற்றில் இது முக்கிய திருப்புமுனையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கின்றது. அந்த பணியை ஊடகங்கள் ஆற்றுகின்றன.
ஜனாதிபதி பதவி விலகுவதில் ஊடகங்களின் பங்கும் உள்ளது. அப்படி இருக்கையில் போராட்டக்களத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே, தாக்குதல் நடத்தியமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அடுத்து வரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்த இராதாகிருஸ்ணன், ஊழல் அற்ற ஒருவர், அரச தலைவராகும் காலம் விரைவில் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.