பிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட 2ஆம் சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட 2ஆம் சுற்று வாக்குப் பதிவில், ரிஷி சுனக்கு ஆதரவாக 101நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இரண்டாம் சுற்று வாக்குப் பதிவில் ரிஷி சுனக்குக்கு அடுத்தபடியாக 83 வாக்குகள் பெற்று வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் 64 வாக்குகள் பெற்றும் சமூக நலத் துறை அமைச்சர் கெமி பேடனாக் 49 வாக்குகள் பெற்றும் முறையை 3 மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளனர்.
32 வாக்குகள் பெற்ற வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவர் டொம் டுகென்தாட்டுக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளது.
இதன்மூலம் பிரதமர் பதவிக்கான போட்டியாளர்களின் எண்ணிக்கை 5ஆக சுருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்து நடைபெறும் வாக்கெடுப்புகளில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் விலக்கப்படுவார்.
கடைசியாக இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் இருக்கும் நிலையில், அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும் அதன் மூலம் நாட்டின் புதிய பிரதமராகவும் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.5 லட்சம் கட்சி உறுப்பினர்கள் தபால் வாக்கு மூலம் தேர்ந்தெடுப்பார்கள்.
அந்த வகையில், கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைசி இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தாலும், நாட்டின் பிரதமரை கட்சி உறுப்பினர்கள்தான் முடிவு செய்வார்கள்.