தமிழ்நாடு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை கடற்பறப்பிற்குள் நுழைந்து அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று அதிகாலை 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை தலைமன்னாருக்கும்- நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இரண்டு படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதில் ஒரு படகையும் அதிலிருந்து 5 மீனவர்களும் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்ததையடுத்து படகை சோதனை செய்த இலங்கை கடற்படையினர் இயந்திர கோளாறை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த படகையும் அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.
எனினும், இன்னொரு படகு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்களை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்ட குறித்த மீனவர்களிடம், இலங்கை கடற்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்கு பின்னர், 6 மீனவர்களும் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளனர்.
மேலும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் இந்திய மத்திய, மாநில அரசாங்கங்கள் ஊடக இலங்கை அரசாத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.