யாழ்.மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்றைய தினம் (திங்கட்கிழமை) மதியத்துடன் கைவிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக (ஞாயிறு , திங்கள்) பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் கல்கமுவ பொலிஸாரினால் , தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவரை கைது செய்துள்ளதாக யாழ்.மாவட்ட இலங்கை போக்குவரத்து சபையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் திங்கட்கிழமை டீசல் கோரி யாழ்.மாவட்ட தனியார் பேருந்து சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டமையால் , யாழில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாததால் , பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கம் காலை 10 மணி வரையில் சேவையில் ஈடுபட்டமையால் வடமராட்சி பகுதிகளில் இருந்து பலர் யாழ்ப்பாணம் வந்து இருந்த நிலையில் மீண்டும் வடமராட்சி செல்ல முடியாது தவித்து நின்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.