உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கு அம்மையினை உலகளாவிய அவசரநிலையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வரை வைரஸ் பரவுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் இலங்கைக்கு குரங்கு அம்மை வைரஸ் வரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
எனினும், வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு இதுவரையில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த வைரஸ் தொடர்பில் இலங்கையின் சுகாதாரத் திணைக்களங்கள் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாகவும், சுகாதார அமைச்சு இது தொடர்பான வழிகாட்டுதல்களை மருத்துவமனைகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் குரங்கு அம்மை இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதால், வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவருக்கு காய்ச்சல் அல்லது இந்த வைரஸ் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்ட எவரும் இலங்கையில் கண்டறியப்படவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.