சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து தமக்கு எவ்வித அழைப்புக்களும் வரவில்லை என சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன.
நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு ஜனாதிபதி அழைப்பு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.
சர்வகட்சி அரசாங்கம் குறித்த அழைப்புக்கள் கிடைத்தால் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடி ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தினை எடுக்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதேநேரம் தமிழ் மக்கள் சார்ந்த முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த அரசாங்கத்தின் பிரதிபலிப்பை அடுத்தே தீர்மானம் எடுக்கப்படும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்கப்போவதில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.