நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட விழிப்புணர்வு பிரிவின் பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலையினால் 65 பிரதேச செயலகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடும் மழை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூவாயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 137 குடும்பங்களைச் சேர்ந்த 574 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்து 149 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 141 வணிக நிறுவனங்களும் சேதமடைந்துள்ளன.