சர்வதேச நிறுவனங்கள், அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதன்படி சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜைக்கா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் மத்தியில், நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதியாக உள்ளது என்பதை அரசாங்கம் காண்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பேசிய மைத்திரிபால சிறிசேன, வெகுவிரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலமே ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திடமே காணப்படும் நிலையில் நாடாளுமன்றத்தில் சில கட்சிகள் அதனை விரும்பவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
அரசாங்கம் முயற்சிக்குமாயின் ஒரு மாத காலத்திற்குள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றும் அது நடந்தால் அமைச்சுப் பதவிகளை ஏற்பதா இல்லையா என்று பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.