தலைநகர் முழுவதும் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர், லண்டனில் சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
லண்டனில் கழிவுநீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த நோயால் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் எதுவும் இல்லை.
பெப்ரவரி மற்றும் ஜூன் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் லண்டன் பெக்டன் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பல கழிவுநீர் மாதிரிகளில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரந்த மக்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக கூறப்படுகின்ற போது, பக்கவாதத்திலிருந்து உயர் மட்ட பாதுகாப்பை உறுதி செய்யவும் மேலும் பரவுவதைக் குறைக்க உதவும் வகையிலும், முன்னெச்சரிக்கையாக லண்டனில் 1-9 வயதுடைய சிறுவர்களுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.
மேலும், லண்டன் மற்றும் தேசிய அளவில் குறைந்தது மேலும் 25 தளங்களுக்கு கழிவுநீர் கண்காணிப்பை விரிவுபடுத்துவதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம்கூறியது.
பிரித்தானியா முழுவதும் பெரும்பாலான மக்கள் குழந்தை பருவத்தில் போலியோ தடுப்பூசி போடுகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 200 போலியோ நோய்த்தொற்றுகளில் ஒன்று மட்டுமே பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான மக்கள் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை.