முல்லைத்தீவு மீனவ சம்மேளத்தினால் இன்று முல்லைத்தீவு நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும் என்றும் மானிய விலையில் மண்ணெண்ணை வழங்க வேண்டும், இந்திய இழுவைப் படகுகளின் வருகையினை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், 3 மாதத்திற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அனைத்தும் தடைசெய்ய வேண்டும் என்றும் எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்றும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டது.
இதில் சுமார் ஆயிரம் பேரளவில் கலந்து கொண்டிருந்ததோடு, மீன்பிடி படகுகளை உழவு இயந்திரத்தின் மூலம் ஏற்றி வந்து தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததை அடுத்து, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மகஜர் ஒன்றும் மீனவர்களால் கையளிக்கப்பட்டது.
இந்த மகஜரானது ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.