மிக நீண்ட காலமாக செயல் இழந்து காணப்பட்ட ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் இயங்க வைத்து தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தென்கிழக்கு பல்கலைக்கழகம் பாராட்டி வாழ்த்தி உள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் இதற்கான பாராட்டு மற்றும் வாழ்த்து செய்தியை சம்பிரதாயபூர்வமாக அமைச்சருக்கு அனுப்பி உள்ளார்.
இதில் இவர் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு எமது நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்து உள்ள இக்கால கட்டத்தில் தாங்கள் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கின்றமையை நான் வரவேற்று வாழ்த்துகின்றேன்.
நாட்டு நலனை முன்னிறுத்தி தாங்கள் மேற்கொள்ள உள்ள மகத்துவம் வய்ந்த அனைத்து வேலை திட்டங்களுக்கும் முன்கூட்டியே எனது வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
அதே நேரம் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக செயல் இழந்து காணப்பட்ட ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் செயற்பட வைத்து தருவதற்கு தாங்கள் மேற்கொண்டு இருக்கின்ற அனைத்து முயற்சிகளுக்காகவும் எமது கல்வி சமூகத்தின் சார்பாக தங்களை பெரிதும் வாழ்த்துகின்றோம்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கி தந்த முன்னோடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் நாமத்தை இத்துறைமுகத்துக்கு தாங்கள் முன்னின்று சூட்டி வைத்தமைக்காகவும் எமது வாழ்த்துக்கள்.
இப்பிராந்தியத்தில் உள்ள உயர் கல்வி ஸ்தாபனம் என்கிற வகையில் தங்களுடைய அபிவிருத்தி சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றின் வெற்றிக்கு எம்மால் முடிந்த அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு காத்திருக்கின்றோம்.
ஆகவே ஒலுவில் துறைமுகத்தை இன்னமும் அபிவிருத்தி செய்வதற்கு தங்களால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள நன்மை பயக்கின்ற அனைத்து முன்னெடுப்புகளுக்கும் எனது பூரண ஆதரவை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே உள்ளேன்.
தாங்கள் கோருகின்ற பட்சத்தில் கடற்றொழில் துறை தொடர்பான எமது நிபுணத்துவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஆயத்தமாகவே உள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.