வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 38பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துனிசியாவின் எல்லைக்கு அருகில் உள்ள எல் டார்ஃப் என்ற இடத்தில் 24பேரும், செட்டிஃபில் ஒரு தாயும் மகளும் உயிரிழந்ததாக அந்நாட்டின் உட்துறை அமைச்சர் கமெல் பெல்ட்ஜவுட் தெரிவித்தார்.
குறைந்தது 200பேர் தீக்காயங்கள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மூலம் வியாழக்கிழமை காலை பல தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.
செட்டிஃப்பில் இறந்த தாய், 58 மற்றும் அவரது 36 வயது மகளின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அங்குள்ள அதிகாரிகள் டசன் கணக்கான வீடுகள் மற்றும் கிராமங்களை காட்டுத்தீ தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
வடக்கு அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 39 தீ சம்பவங்கள் பரவி வருவதாகவும், அனல் காற்று வீசுவதால் தீ மேலும் பரவக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எல் டார்ஃப் நகரம் தற்போது 16 தீ சம்பவங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி என்று சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பல மாகாணங்களில் சுமார் 350 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு அல்ஜீரியா ஒவ்வொரு ஆண்டும் காட்டுத் தீயால் பாதிக்கப்படுகிறது, ஒகஸ்ட் முதல் அல்ஜீரியாவில் 106 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன, 800 ஹெக்டேர் காடுகளையும் 1,800 ஹெக்டேர் வனப்பகுதிகளையும் அழித்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 90பேர் தீயில் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் 100,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்தது.