கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியமமிக்கக் கோரி மாணவர்கள், பெற்றோர்களினால் போராட்டமொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு, கடந்த 3 மாதங்களாக அதிபர் நியமிக்கப்படவில்லை.
கடமையிலிருந்த அதிபர் பாடசாலை பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை.
இதேவேளை, பிரதி அதிபரும் ஒய்வு நிலையை அடைந்துள்ள நிலையில், மேலதிக சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளார்.
42 ஆசிரியர்களையும், 800 மாணவர்களையும் கொண்ட குறித்த தேசிய பாடசாலையின் நிர்வாக செயற்பாடுகளை இதனால் முன்னெடுக்க முடியாத நிலையில் காணப்படுவதாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நிரந்தரமாக அதிபர் ஒருவரை நியமித்து தருமாறும், கல்விசார் விடயங்களை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை விரைந்து எடுக்குமாறும் வலியுறுத்தியே இன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய அதிபரை பாடசாலைக்கு நியமிக்குமாறு கோஷமெழுப்பியும் பதாதைகளை ஏந்தியும் கேட்டுக் கொண்டனர்.