ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐ.நா. சபையிலே கூறி வந்த கூற்றை, இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கத்திலே ஐ.நா. சபையிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறியிருந்தார். அதே பிரதமர் இப்போது ஜனாதிபதியாக வந்திருக்கின்ற சூழலிலே அவர் கொடுத்த வாக்குறுதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். ஆகவே ஐ.நா.வுக்கு ஒன்று கூறுவதும், வெளியே ஒன்றை செய்வதுமாக இருக்கின்ற சூழலை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதும், பயங்கரவாத தடைச்சட்டமும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுவதைவிட மோசமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
ஆகவே பிரதமராக இருந்து ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐ.நா. சபையிலே கூறி வந்த அந்த கூற்றை இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கூறிய வார்த்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆகவே ஜனாதிபதி இவற்றi மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஐ.நா.வுக்கு கொடுத்த வாக்குறுதியை, சந்தர்ப்பத்தை ஜனாதிபதி நிறைவேற்றிகொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.- என்றார்.