அரசாங்கத்தை சீர்குலைத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்வதே எதிர்க்கட்சிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொதுஜன பெரமுன செயற்பட்டாலும் அதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்றும் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளதை தாம் ஒப்புக்கொள்வதாகவும், சர்வதேச நாணய நிதியத்தை மட்டும் பார்க்காமல் நாட்டை உயர்த்த அவசர வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடு பொருளாதார ரீதியில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.