கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானபோது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நடிகை தமிதா அபேரத்னவைப் பார்க்க இன்று கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அவர் உண்மையில் ஒரு பொதுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
அவரை 9ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று தியத்த உயன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் எந்த சட்ட விரோத செயலையும் செய்யவில்லை. அவர் வன்முறையில் ஈடுபடவில்லை. பொது, தனியார் சொத்துகளை சேதப்படுத்தவில்லை. மனித உரிமைகளை பயிற்றுவித்து வருகிறார். எனவே, தயவு செய்து தமிதா அபேரத்னவை விடுவிக்க சபாநாயகர் தலையிடவும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.