இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்று வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வரி ஏய்ப்பு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்ட அவர், பல்பொருள் அங்காடிகளை நடத்தும் எந்தவொரு நிறுவனமும் ஒரு சதம் கூட வரி செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளாவிய ரீதியில் 48 விற்பனை நிலையங்களைக் கொண்ட ஒரு பிரபலமான துணிக்கடையும் ஆண்டுதோறும் ரூ. 700 மில்லியன் சம்பாதிக்கும் ஆடை நிறுவனமும் வரி செலுத்துவதைத் தவிர்க்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டேட் வங்கியில் 1.4 மில்லியன் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட மூத்த அதிகாரியின் வரிகளை வங்கியே செலுத்துகிறது என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டுமென்றும் இதன் மூலம் வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.