இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வரலாற்று சின்னமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு பொக்கிசமாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் திகழ்கின்றது. ‘கல் நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலம்’ ஆக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 15 தினங்கள் ஆலயத்தில் தம்ப பூசை, வசந்த மண்டப பூசை, சுவாமி உள் வீதியுலா வெளிவீதியுலா என்பன நடைபெற்று வந்தன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற வசந்த மண்டப பூசையினைத் தொடர்ந்து பார்வதி, சிவன், பிள்ளையார், வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியன் ஆகியோர் வெளிவீதியில் சித்திரத் தேரில் ஆரோகணிக்கப்பட்டதை தொடர்ந்து விசேட பூசைகள் நடைபெற்றன.
தேர் உற்சவத்திற்காக தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் வழமையான நடைமுறைகளைத் தொடர்ந்து வடம் இழுக்கப்பட்டு தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.