நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு வங்கிகளின் நிதி நிலைமையை பாதுகாத்து கடன் பெற்ற தொழில் முயற்சியாளர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பணப்புழக்கத்தைப் பாதுகாக்க வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் சில தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
வங்கி முறையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் அவசியமானாலும், வர்த்தகர்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானது என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய உரிய சலுகைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் வங்கிகளின் தலைவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச வங்கிகளின் தலைவர்களுடன் நிதி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துஅமைச்சுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.