உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உழுந்து, பயறு செய்கையை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விதை தானியங்களை வழங்கி வைத்தார்.
9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உழுந்து மற்றும் பயறு ஆகிய விதை தானியங்கள் விவசாயிகளின் கையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் , வவுனியா நகரசபை உப தபிசாளர் குமாரசாமி, மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசசபை உறுப்பினர் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.