மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரமணாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளில் நான்கு வான்கதவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் திறக்கப்பட்டதுடன், வினாடிக்கு 200 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.
இந்த பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் எஞ்சிய வான் கதவுகளும் திறக்கப்படும் என்பதால், மேல் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு கீழே கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு உதவிப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தொடரும் மழை காரணமாக அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சென் கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீரும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.