இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலை திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார். 2016 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புகள் வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது.
அந்த வழிகாட்டக் குழுவிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நானும் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றோம்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான இரண்டு இடைக்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. 2019 ஜனவரி மாதம் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு நிபுணர் குழுவினால் வரையப்பட்ட ஒரு முழுமையான அரசியலமைப்பு வரைவு கூட அப்பொழுது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கமினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து வந்து ஜனாதிபதி தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக முன்நின்ற சஜித் பிரேமதாஸவுடைய தேர்தல் அறிக்கையிலே அந்த முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு முடிவை எட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டது.
2016 ஆம் ஆண்டு அரசியலமைப்பு பேரவையாக உருவாக்கப்பட்டு பலவித கூட்டங்கள் கலந்துரையாடல்கள் மக்கள் சந்திப்புகள் செய்யப்பட்டு மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலை செய்யப்பட்டது. அதனடிப்படையில் தொடர்ந்து முன் சொல்ல ஜனாதிபதி ஆவணம் செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சிக்காலத்திலே இந்த வேலை செய்யப்பட்டது. இதனை வெகு விரைவாக தொடர்ந்து முன்னெடுத்தால் ஒரு வருட காலத்திற்குள் இதனை முடிவுக்கு கொண்டு வரலாம். ஒரு வருடம் கூட தேவை இல்லை. அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்ற நேரத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை கொடுப்போம் என ஜனாதிபதி அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.