வவுனியா மன்னகுளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள மங்கைகொடி என்ற குளத்தினை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
180 குடும்பங்கள் வாழும் கொல்லர் புளியங்குளத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள மங்கை கொடி என்ற குளம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் உடைப்பெடுத்தமையினால் திருத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
எனினும் இக்கிராம மக்கள் 1996 ஆம் அண்டு காலப்பகுதியில் இருந்து குறித்த குளத்தினை திருத்தம் செய்து தருமாறு கோரியபோதிலும் அது நிறைவேறாத நிலையில் பல அமைச்சர்கள் வடமாகாண சபை மற்றும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதன் காரணமாக எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் இம்மக்கள் ஒரு ஏக்கர் வயல் நிலம் கூட இன்றி காணப்படுவதனால் தமக்கு குறித்த குளத்தினை திருத்தம் செய்து தரும் பட்சத்தில் அதன் கீழ் 360 ஏக்கர் வயல் நிலைத்தினை துப்பரவு செய்து குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் என்ற வீதத்தில் விவசாயம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.
விவசாயத்தினையே அடிப்படையாக கொண்ட இக்கிராம மக்கள் தமது வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு மங்கைகொடி குளத்தினை திருத்தம் செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.