தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு எதிராக ஒரு சில தமிழ் பிரதிநிதிகளே எதிர்ப்பினை வெளியிடுவதை வண்மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், “21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பிற்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசமைப்பு பேரவையை நாம் விரைவில் ஸ்தாபிக்க வேண்டும். மேலும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான ஆணையாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கும் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என இவ்வேளையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த மாத இறுதியில் யாழிலும், கிளிநொச்சியிலும் நாம் இரண்டு நடமாடும் சேவை நிகழ்வுகளை நடத்தினோம். வடமாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலேயே இவற்றை நடத்தினோம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ள பலருக்கு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் இல்லை. எனவே, இந்தப் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் 12 அமைச்சுக்களை ஒன்றிணைந்தே நாம் இந்த நடமாடும் சேவை பணியை முன்னெடுத்திருந்தோம்.
நாம் இந்தப் பணிகளை துரிதமாக நிறைவு செய்யவும் எதிர்ப்பார்த்துள்ளோம். இந்த நிலையில், நாம் யாழில் நடமாடும் சேவை நிகழ்வை நடத்தியபோது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் 20 இற்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.
கிளிநொச்சியிலும் எமக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், நாம் எமது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் எமக்கு இதன்போது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த நிலையில் எமது முயற்சியை சீர்குலைக்கும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை நாம் கண்டிக்கிறோம்” என்றார்.