நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், தமிழர்களுக்கு தீர்வை வழங்காமல், அதற்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிங்கள மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கங்கள் நிறைவேற்றாத காரணத்தினாலேயே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.
எனவே நாட்டை இரண்டாக பிரிக்காமல் அதிகாரத்தை பிரித்து வழங்கி ஒரு தீர்வை வழங்க வேண்டும் என தெரிவித்த இரா.சாணக்கியன், அதிகாரப் பரவலாக்கல் என்பது நாட்டை பிரிக்கும் யோசனை இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.