ஓய்வுபெறும் வயதுக்கு அப்பால் மூன்றாண்டு பதவிக்காலத்தை முடிக்க நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகருக்கான அனுமதியை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலம் நிராகரித்துள்ளது.
இதில் ஒருவர் ஏற்கனவே ஓய்வு பெறும் வயதை அடைந்துவிட்ட அதேவேளை அடுத்த ஆண்டுக்குள் ஓய்வுபெறும் வயதை எட்டும் நான்கு பேருக்காகவே இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற கொள்கையை வைத்து எந்த நீடிப்புகளையும் வழங்குவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூதுவர்கள் பி.எம். அம்சா (ரியாத்), கிரேஸ் ஆசிர்வதம் (பிரசல்ஸ்), ஏ. சபருல்லா கான் (ஓமன்) மற்றும் எஸ்.டி.கே சேமசிங்க (வார்சா) மற்றும் உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் (மாலத்தீவு) அகியோருக்காகவே இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரிகளின் எண்ணிக்கையை வெளிநாட்டு தூதரகத் தலைவர்களாக நியமிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, 50 சதவீதத்திற்கும் குறைவான தூதரகத் தலைவர்கள் வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.