ஐரோப்பாவின் கோகோயின் விநியோகத்தில் மூன்றில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்திய போதைப்பொருள் குழுவான ‘சுப்பர் கார்டெல்’ முடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொலிஸ் முகவரகமான யூரோபோல் அறிவித்துள்ளது.
‘ஆபரேஷன் டெசர்ட் லைட்’ என அழைக்கப்படும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, ஆறு ஐரோப்பிய நாடுகளில் 49 பேர் கைது செய்யப்பட்டதாக யூரோபோல் தெரிவித்துள்ளது.
இரண்டு வருட விசாரணையில் 30 டன்களுக்கும் அதிகமான (30,000 கிலோ) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யூரோபோல் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரிகள் ஒன்றிணைந்து ‘சுப்பர் கார்டெல்’ குழுவை முடக்கியதாக யூரோபோல் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சர்வதேச பொலிஸால் மிகவும் தேடப்பட்ட ஆறு உயர் மதிப்புமிக்கவர்கள் அடங்குவர். இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் பிரித்தானிய நாட்டவரும் இந்த கைதில் அடங்குவார். அவர் கோஸ்டா டெல் சோலில் வசித்து வந்ததாக ஸ்பெயின் பொலிஸார். தெரிவித்தனர்.
தென் அமெரிக்காவிலிருந்து நெதர்லாந்து வழியாக இறக்குமதி செய்யப்பட்ட கோகோயின், விசாரணையின் முக்கிய மையமாக இருந்தது, மேலும் பெரும்பாலான கைதுகள் 2021இல் அங்கு செய்யப்பட்டன. மற்றவை இந்த மாத தொடக்கத்தில், நவம்பர் 8-19ஆம் திகதிகளுக்கு இடையில், மற்ற ஆறு நாடுகளில் ஒருங்கிணைந்த சோதனைகளின் போது செய்யப்பட்டதாக யூரோபோல் தெரிவித்துள்ளது.