உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கிய பணத்தை, அரச மருந்துகள் கூட்டுத்தாபனம் முறையாக பயன்படுத்தவில்லை என்பது கோப் குழுவில் தெளிவாகத் தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டிற்கு கொண்டு வரப்படும் மருந்துகள் ஆரம்பத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட போதிலும், மாதிரி பரிசோதனைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஒரு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதுடன், தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்மூலம் மருந்துக் கொள்வனவு மோசடி கும்பலின் பிடியில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செலவுத் தலைப்புகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.