வடக்கு கிழக்கில் உள்ள கல்வி திணைக்களங்களின் செயற்பாடுகள் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் உள்ளதே ஒழிய மாணவர் நலனோ, கல்வி அபிவிருத்தி நலனோ இல்லை. பதவியிலிருப்பவர் அடுத்த பதவியுயர்வினை எடுப்பதற்காக அந்த அரசியல்வாதியின் காலடியில் விழும் நிலையில் இருந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும்? என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து “இன்று வடகிழக்கில் கல்வி திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. இவை வடகிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் உள்ளதே ஒழிய மாணவர் நலனோ, கல்வி அபிவிருத்தி நலனோ இல்லை. பதவியிலிருப்பவர் அடுத்த பதவியுயர்வினை எடுப்பதற்காக அந்த அரசியல்வாதியின் காலடியில் விழும் நிலையில் இருந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும்? எப்படியொரு கல்வியினால் உயர்ந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்? உண்மையிலேயே எனது மாகாணத்தில் கல்வித் துறை சார் நிருவாகம் தொடர்பாக நடைபெறுகின்ற சீர்கேடுகளை இந்த உயரிய சபையில் எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை நான் கருதுகின்றேன்.
இது எவர் மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சியோ, தனிப்பட்ட குரோதமோ அல்ல. எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்பின் வெளிப்பாடே இதுவாகும்.
அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவை நான் வரவேற்கின்றேன். ஏனெனில், இந்த நாடு இனப்பிரச்சினை என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முதல் காரணியே அரச பல்கலைக்கழக அனுமதியில் திறமையைப் புறக்கணித்து மாவட்ட விகிதாசாரக் கோட்டாவினைக் கொண்டு வந்ததேயாகும். இதனை, இதன் உண்மைத் தன்மையின் தார்ப்பரியத்தை எமது ஜனாதிபதியவர்கள் உணர்ந்துள்ளமைமையை வரவேற்கின்றேன்.
இலங்கைளயில் தேசிய கல்வி நிறுவகம் கடந்த முப்பது வருடங்களாக இயங்குகின்றது. 1985ம் ஆண்டு 25ஆம் இலக்க சட்டத்தின்படி இலங்கையிலுள்ள ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவும் அவர்களுக்குத் தொழில் அங்கீகரச் சான்றிதழ்களை வழங்கவும் தேசிய கல்வி நிறுவகத்திற்குத் தான் அதிகாரம் இருக்கின்றது. தற்போது அத்தேசிய கல்வி நிறுவகங்களை பல்கலைக்கழகம் ஆக்குவதற்கான யோசனை எழுந்துள்ளது.
இந்தியா, மலேசியா, அமெரிக்காவில் இருப்பதைப் போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு தேசிய கல்விப் பல்கலைக்கழகமாக மாற்றலாம். இங்கு 24 கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்தவர்களும், பாரிய கட்டிட மற்றும் இதர வசதிகளும் இருப்பதனால் இலகுவாக இதனை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
அதேபோல் பத்தொன்பது தேசிய கல்விக் கல்லூரிகளையும் இணைத்து அதனையும் உங்கள் யோசனையின் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் கீழ் ஒரு பல்கலைக்கழகமாக மாற்றலாம். ஆனால் 2019, 2020 களிலே தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவான மாணவர்களிலும் பார்க்க இவ்வருடம் இரட்டிப்பான மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிய வருகின்றது. ஒரு ஆசிரிய மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு தற்போது ஐயாயிரம் ரூபாய் தான் ஒதுக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதாரச் சூழலிலே ஒருநாளைக்கு நூற்றுஅறுபது ரூபாய்களே கிடைக்கின்றன. இதிலேயே அவர்களின் ஒருநாளைக்கான மூன்றுவேளை சாப்பாடு உட்பட இதர செலவுகளும் அடங்குகின்றன. எனவே இந்த ஐயாயிரம் ரூபா விடயத்தில் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி அந்த ஆசிரியர்கள் போசாக்கான ஆசிரியர்களாக வெளிவந்து கற்பிப்பதற்காக ஆவன செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.