மும்பையில் ஒரு பரபரப்பான வீதியில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபரிடம் தவறாக நடந்துக்கொண்ட இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், துன்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளார் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை இரவு நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த குறித்த பெண்னை அணுகிய இளைஞர் ஒருவர் பெண்ணின் கையை இழுத்துப் பிடித்து, முத்தமிட முயன்றார். இதனால், கடும் அதிருப்திக்குள்ளான பெண், இந்த காணொளியினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தநிலையில் இவ்விடயம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளார் அரிந்தம் பாக்சி கூறுகையில்,
‘மும்பையில் துன்புறுத்தப்பட்ட தென் கொரிய பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளூர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும். இந்த விவகாரம் தூதரக ரீதியிலான பிரச்சினையாக மாறினால், கொரிய தூதரகம் எங்களை அணுகினால், நிச்சயம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணும்’ என கூறினார்.