எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் லாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பாக இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட்டோம். 2023 தொடங்கியதுமே இந்த நாட்டில் சின்னவெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு வரப்போதை நாங்கள் மறந்துவிட்டோம்.
எங்கள் மாவட்டத்தில் இந்தாண்டு பெரும்போக பயிர்ச்செய்கை வழமைபோல நடக்கவில்லை. சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறி எதுவும் இம்முறை வழமைபோல பயிரிடப்படவில்லை.
யாழ்ப்பாணத்தின் விவசாய நிலங்கள் புற்களும் புதர்களுமாக நிரம்பிக்கிடக்கிறது. இப்போது ஒரு கிலா 400 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரக்கறியையும் வாங்கமுடியாது. விரைவில் கையில் காசு இருந்தாலும் கடையில் காய்கறி இல்லாத நிலைதான் வரப்போகிறது.
இப்போது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல எங்களது கடல்வளமும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. நாட்டின் மூன்றில் 1 பங்கு கடல்வளம் வடக்கில்தான் உள்ளது. ஆழ்கடல், குடாக்கடல், தரவைக்கடல், தீவுப்படுக்கைகள் என எல்லா வளங்களும் வடக்கில் உள்ளது.
இவற்றையெல்லாம் பாதுகாத்த பாரம்பரிய மீன்பிடியைதான் எங்கள் மக்கள் செய்தனர். ஆனால் இன்று டொலரை கொண்டு வரும் கடல் அட்டை பண்ணைகள் வடக்கில் அதிகரித்துள்ளது. இதற்காக கரையோரங்கள் கணக்கில்லாமல் ஆக்கிரமிக்கப்படுகிறது.
இதனால் கண்டல் தாவரங்கள் அழிந்து மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படுகிறது. இப்போதுவரை வடக்கில் 616 ஏக்கர் வரை கடல் அட்டை உற்பத்தி நடைபெறுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் இயற்கையான கடலட்டைகளை பிடித்து பதப்படுத்தி வியாபாரம் செய்த உள்ளூர் வியாபாரிகள் இருந்தார்கள். ஆனால் அப்போது கடற்சூழலுக்கோ கடற்றொழிலாளர்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.
ஆனால் இப்போது கடலட்டை குஞ்சுகளை பிடித்து பண்ணை அமைத்து செயற்கையாக இனப்பெருக்கம் செய்கிறார்கள். இயற்கையாக கிடைக்கும் வளத்தை அளவோடு பெறாமல் அளவுக்கதிகமாக ஆசைப்பட்டு இருக்கிற வளத்தையும் அழிப்பது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். மீனவர்கள் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள்.
இலவன்குடா கிராஞ்சி பிரதேசத்தில் மீனவர்கள் தொடர்ந்து 70 நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். அனலைதீவுக்கு அருகாக உள்ள பருத்தித்தீவில் அமைக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் கடலட்டைப் பண்ணையை அகற்றுமாறு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனம் போராடுகிறது. ஆனால் இப்படி போராடுபவர்கள் மீது வழக்கு தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமது வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் மீனவர்கள்மீது பொய்வழக்குகள் தொடுத்து பழிவாங்குவது மகா மட்டமான அரசியலாகும்.
முதலில் இந்த விடயத்தை நாங்கள் ஆராய வேண்டும். எங்களுடைய மக்கள் கடல் அட்டையை சாப்பிடுவதில்லை, அவர்கள் சாப்பிடும் மீன்களை கூட பிடிக்க கூட ஏராளம் பிரச்சனைகள்.
இந்திய றோலர் மீனவர்களையும் தடுக்குமாறு எங்கள் மீனவர்கள் காலங்காலமாக கேட்கிறார்கள். இப்போது கடல்அட்டை வியாபாரமும் அவர்களை வஞ்சிக்கிறது.
கடலட்டை ஏற்றுமதியால் வரும் டொலருக்கு ஆசைப்பட்டு, எமது மக்கள் சாப்பிடும் மீன்களைகூட இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படப்போகிறோம். இப்போது சீசன் காலத்து மீன்கள் கூட சந்தையில் மலிவாக இல்லை. பாரை மீன் 1200 ரூபா, விளை மீன் 1000 ரூபா, முரல் மீன் 600 ரூபா, இறால் 1500 ரூபா, நண்டு 1600 ரூபா, கணவாய் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படியே நிலைமை போனால் எங்கள் மக்களையும் கடலட்டையை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டிய நிலைதான் உருவாகும்.
மீனவர்களோ, நாங்களோ யாரும் கடல் அட்டை வியாபாரத்தை வேண்டாம் என்று கூறவில்லை. வாழ்வாதார மீனவர்களை கவனிக்காது வெறுமனே வர்த்தக மீன்பிடியை மட்டும் வளர்க்க வேண்டாம் என்கிறோம்.
டொலருக்காக கடற்றொழிலுக்கு சம்பந்தமே இல்லாதவர்களோடு கைகோர்க்க வேண்டாம் என்பதே மீனவர்களது கோரிக்கை. பரம்பரை பரம்பரையாக கடலையும், தொழிலையும் அறிந்த எங்கள் மீனவர்களுக்கு தொழில்நுட்ப, வர்த்தக உதவிகளை வழங்க வேண்டும். இதனால் உள்ளூர் மக்களின் கடல் உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து, மீனவர்களுக்கு ஏற்றுமதி லாபத்தையும் கிடைக்க வழி செய்ய முடியும். யாரோ ஒருவர் முழு லாபத்தையும் கொண்டு செல்ல எங்கள் கடல்வளத்தை அடகுவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
மீனவர்களோடு இணைந்து செயற்பட வேண்டிய கடற்றொழில் அமைச்சும் naqda போன்ற நிறுவனங்களும் தமக்கு எதிராக நிற்பதாக மீனவர்கள் கவலைப்படுகிறார்கள்.
எனவே எங்கள் வளங்களை பாதுகாத்த எங்கள் மக்களுக்கு துரோகமிழைக்காமல், எங்கள் வளங்களை தாரைவார்க்காமல் செயற்பட்டால் மட்டுமே, நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகாலத்துக்கு நிலைநிறுத்த முடியும். இல்லையென்றால் குறுகியகால வருமானம் மட்டுமே கிடைக்கும் ஒரு பிரபலமான திட்டமாகவே இவையும் அமையும் என்பதை ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.