சம்பந்தன் போர் குற்றவாளியா? என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2126வது நாள் இன்று.
அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் சம்பந்தன் கூறியது யாழ்ப்பாணத்தில் ரணில் சொன்னதுதான்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சம்பந்தன் சர்வகட்சி கூட்டத்தில் அவர் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டது சம்பந்தனுக்கு எப்படி தெரியும்?அவர் அதை நம்பினால், ஆதாரம் மற்றும் நேரில் கண்ட சாட்சியைக் எமக்கு காட்டுங்கள்.
இலங்கை சிங்களத் தலைவர்களிடம் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்த அனைவரையும் கொல்லச் சொன்னதால் தான் , அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தைரியமாக வெளியே வந்து சொல்ல முடிகிறது.
இதனால்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு வன்னியை சிங்களவர்கள் கைப்பற்றும் வரை சம்பந்தனும் ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களும் சென்னையில் ஒளிந்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை விரும்பாததற்குக் காரணம், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் குற்றவாளியாக்கும் என்பதாலேயே என தெரிவித்தார்.