அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது விபத்துக்களில் சிக்காமலும் வன்முறைகளில் ஈடுபடாமலும் இளைஞர்கள் இருக்க வேண்டுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் விபத்துக்களில் சிக்குதல், வாள்வெட்டு வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடல் போன்றவற்றால் தேவையற்ற நெருக்கடி ஏற்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளில் காகித தட்டுப்பாடு ஏற்படும். இவ்வாறான நேரத்தில் புலம்பெயர் தேசத்தவர்கள் தாங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும்.
குளிரூட்டி, நவீன சாதனங்கள் வழங்குவது என்பது ஒரு பக்கம் இருக்க அடிப்படை விடயமான கல்வியில் நாம் கரிசனை கொள்ள வேண்டும்.
இலவச பாட புத்தகங்களை அச்சிடுவதற்காக அரசாங்கம் திண்டாடும் போது அடிப்படை கல்விக்கான புத்தகங்கள் கொப்பிகளை வாங்குவதற்கு புலம்பெயர் தேசத்தவர்கள் உதவ வேண்டும்.“ என்றார்.