மலையக தமிழர்களின் அரசியல்சார் பிரச்சினைகளை தீர்க்க ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘மலையகம் தொடர்பாக ஆணைக்குழுவொன்றை அமைத்து, அந்த ஆணைக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் மலையக தமிழர்களின் அரசியல்சார் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
அப்போதுதான் தேசிய நீரோட்டத்தில் எமது மக்களும் இணையக்கூடும். தமது பதவி காலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி இதனை செய்ய வேண்டும். அதை செய்வார் என நம்புகின்றோம்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. கூட்டாகவும், தனித்தும் தேர்தல்களை எதிர்கொண்ட அனுபவம் காங்கிரசுக்கு உள்ளது.
எனவே, நேர காலத்துக்கு ஏற்ற வகையில் தேர்தல் சம்பந்தமாக எமது கட்சியின் தேசிய சபைக்கூடி முடிவை எடுக்கும்’ என கூறினார்.