உலக நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாமல் நடைபெறும் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை காலத்தை வீணடிக்கும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாடுகளுடைய அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை விடுதிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டிருந்தாலும் முதலில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளும் மத தலைவர்களும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார்.
1948 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியாளர்களுடன் பேசி எவ்வித தீர்வும் கிடைக்காத இந்த சந்தர்ப்பத்தில் வெறுமனே இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தனக்கில்லை என தெரிவித்தார்.
ஆகவே இந்தியா அமெரிக்கா அல்லது பிரித்தானியாவில் ஏதோ ஒரு நாடுகள் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.