படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் அறுத்து எடுத்து சென்றுள்ளனா்.
இந்நிலையில் அதனை மீட்பதற்காக தமிழகம் – நாகை மினவா்கள் இலங்கை மீனவா்களை பின்தொடா்ந்து வந்த நிலையில் படகு இயந்திரம் பழுதடைந்து வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனா்.
நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 27ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை சேர்ந்த சரவணன், பாண்டியன் உள்ளிட்ட 4 மீனவர்கள் பைப்பர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்ததாகவும்,
இந்நிலையில் நேற்று நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என விரட்டி அடித்ததுடன் தமது வலைகளை அறுத்து எடுத்துச் சென்றதாக தஞ்சமடைந்துள்ள மீனவர்கள் கூறுகின்றனா்.
பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை இலங்கை மீனவர்கள் எடுத்துச் சென்ற நிலையில் அந்த வலைகளை தேடி யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிக்கு வந்தபோதே தமது படகில் உள்ள இயந்திரம் பழுதடைந்து தம் தஞ்சமடைந்ததாகவும் கூறியிருக்கின்றனா்.
தஞ்சமடைந்த மீனவர்களை மீட்ட வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி மக்கள் அவர்களுக்கு உணவு வழங்கியதுடன் வல்வெட்டிதுறை பொலிஸாருக்கும், இலங்கை கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதுடன் பாதுகாப்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனா்.
இந்நிலையில் தஞ்சமடைந்த மீனவர்களை உடனடியாக தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப பொலிஸாருடன் இணைந்து யாழ்.இந்திய துணை துாதரகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.