நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் தொடர்ந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான காரணம் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அரசாங்கத்தின் ஆட்சியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில், மக்கள் விரும்பும் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு டொலர்கள் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை ரூபாவிலேயே தேர்தல் செலவுகள் மேற்கொள்ளப்படும். இதற்காக நிதி இவ்வாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமின்றி, அரசாங்கம் முயற்சித்தால் மாகாணசபைத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும்.
ஜனாதிபதி விரும்பினால் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும்.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.