உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயம் நடைபெறும் என எதிர்பார்க்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று ( வியாழக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி ரத்னாயக்க உள்ளிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு சென்று கட்டுப்பணம் செலுத்தினர்.
நுவரெலியா மாநகரசபை, தலவாக்கலை – லிந்துலை நகர சபை, ஹட்டன் – டிக்கோயா நகரசபை மற்றும் 9 பிரதேச சபைகளுக்கே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட சிபி ரத்னாயக்க,” ஜனநாயக வழியில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றோம். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மொட்டு கட்சிகளுக்கிடையில் பேச்சுகள் தொடர்கின்றன.” – என்றார்.