ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்து, யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், “உயர் அதிகாரியொருவர் அவருக்குக் கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் இழைக்கும் குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டம் உலகலாவிய ரீதியாக நடைமுறையில் உள்ளது.
இந்த கால்டோனா சட்டமானது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக இலங்கையிலும் இன்று அமுலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டமானது இலங்கையில் அமுலுக்கு வருவது இதுதான் முதன்முறையாகும். இவ்வாறான சட்டத்தினால், சரத்பொன்சேகா கூட எதிர்க்காலத்தில் தண்டனைக்கு உள்ளாகலாம்.
ஏனெனில், அவரும் யுதத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரியாவார். யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதனால் கனடா அரசாங்கம் தடையும் விதித்துள்ளது. ஏன் இந்த தடை விதிக்கப்பட்டது?
யுத்தத்தின்போது மனித உரிமைகளை மீறினார்கள் என, நாளைய தினம் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், இந்த சட்டத்தின் ஊடாக இவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக்கப்படுவார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. மாறாக யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவருமாறு தான் உத்தரவிட்டிருந்தார்.
எனவே, நாளைய தினம் அவருக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குத் தொடரப்பட்டால், அவர் எவ்வளவு கோடிகளை நஷ்ட ஈடாக வழங்க வேண்டியேற்படுமோ என்பது தெரியாது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் பிரிவினைவாதிகள் இதேபோன்று வழக்கு தொடுத்தால்கூட, ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்து, அவருக்கும் கோடிக்கணக்கில் நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வரலாம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் நஷ்டஈடு செலுத்த வேண்டியேற்படும். ஏன், பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கும் இதே நிலைமைதான் ஏற்படும்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பின் ஆபத்து குறித்தே இங்கு நாம் பேசுகிறோம். நாம் அந்தத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம்.
ஆனால், இது இராணுவ அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதிகளிடம் கூட தாக்கத்தை செலுத்தும்.
இதனை நாடாளுமன்றமும் உணர்ந்துக் கொண்டு, இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான சட்டத்திட்டங்களின் ஊடாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராணுவ அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால், இந்நாட்டில் எவருக்கும் தனது கடமைகளை செய்ய முடியாமல் போய்விடும்.’ எனத் தெரிவித்துள்ளார்.