சர்ச்சைக்குரிய தீவுகளைைச் சுற்றிய கடற்பகுதியில் ஜப்பானிய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு விரும்பவில்லை என ரஷ்யா நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
வடக்கு ஜப்பானிய தீவான ஹொக்கைடோவிற்கு அப்பால் உள்ள தீவுகள், ரஷ்யாவில் குரில்ஸ் என்றும், ஜப்பானில் வடக்குப் பகுதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
குறித்த தீவுகளுக்கு சுற்றிய கடற்பகுதியில் ஜப்பானிய மீனவர்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ரஷ்யா கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இருப்பினும் மீன்பிடிக்கும் உரிமத்தைப் புதுப்பிப்பது குறித்து ரஷ்யாவுடன் ஆண்டுதோறும் பேச்சு நடத்த விரும்புவதாக ஜப்பான் கூறி வருகின்றது.
உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து , அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஜப்பான், பல ரஷ்ய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.