ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரச படைகளின் தாக்குதல் மற்று அதன் பின்னான கைது நடவடிக்கையை அடுத்து, தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.
தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஊடாக நேற்று (திங்கட்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் வேலன் சுவாமிகள் பங்கேற்றிருந்தார்.
இதன்போது சட்டவிரோதமான ஒன்றுகூடலில் ஈடுபட்டமை, களேபரத்தில் ஈடுபட்டமை, காயமேற்படுத்தியமை, அரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அத்துமீறி பிரவேசித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வேலன் சுவாமிகள் கடந்த 18 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அன்று இரவே நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இதன் வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையிலேயே நேற்றுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.