பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்து, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்வரை, போராட்டங்களை கைவிடப் போவதில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், கைது செய்யப்பட்டபோது தனக்கு நேர்ந்த பல்வேறு அநீதிகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் வேறு சில ஒடுக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்தி, கடந்த 6 மாத காலமாக போராட்டங்களில் ஈடுபட்டவர்களை சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
கடந்த காலங்களில் மக்கள் கடுமையான சிக்கல்களுக்கு முகம் கொடுத்தார்கள். இதன் பிரதிபலனாகத்தான் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் ஆரம்பமாகின.
இதனால், அரச தலைவர்கள் பின்கதவால் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதிவியிலிருந்தும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்தும், பசில் ராஜபக்ஷ நிதியமைச்சர் பதவியிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்டார்கள்.
மக்கள் பலத்திற்கு முன்னாள், எதையும் வெற்றிக்கொள்ள முடியும் என்பதை காண்பித்தோம்.
இந்த நிலையில்தான், நான் உள்ளிட்ட சிலரை பயங்கரவாதத் தடைச்சட்டதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.
இது தனிநபர் மீதான அடக்குமுறைக்கிடையாது. மாறாக, போராடும் ஒவ்வொரு மனிதனுக்கும் அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையாகவே இது கருதப்படுகிறது.
கடந்தாண்டு ஒகஸ்ட் 18 ஆம் திகதி பேலியகொட விசேட அதிரடிப்படை பொலிஸாரினால் நாம் கைது செய்யப்பட்டோம்.
கைது செய்து என்னை எந்தவொரு அறிவித்தலுமின்றி, பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு என்னை மறைத்து வைத்து, அடுத்தநாள் அதிகாலையில் என்னை என்டேரமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
அப்போது பொலிஸ் நிலையத்திலுள்ள ஏனைய அனைத்து கைதிகளையும் அங்கிருந்து அகற்றிவிட்டார்கள்.
அப்போது ஏ.எஸ்.பி. மஹிந்த விலோலாராச்சி என்பவர், என பக்கமாக துப்பாக்கியை திருப்பி, விஜேயவீர, விஜேய குமாரதுங்கவுக்கு நேர்ந்தது உனக்கு நியாபகமா? என கேட்டார்கள்.
அவர்களின் நிலைமைதான் உனக்கும் நேரிடும். ஆனால், இப்போதுள்ள நிலைமையில் உன்னை கொலை செய்ய முடியாதுள்ளது என்றும் இன்னும் இரண்டு வருடங்களில் உன்னை கவனித்துக் கொள்கிறோம் என எச்சரித்தார்கள்.
நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தாமல் எம்மை வைத்திருந்தார்கள். வாகனங்களில் எம்மை ஏற்றிக்கொண்டு, கரையோர பொலிஸ் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.
குடியிருப்பில் உள்ள கீழ் மாடியில், இருட்டு அறையில் எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் மணித்தியாலக்கணக்கில் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்.
பல நாட்களாக என்னை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, ஒவ்வொரு இடத்திற்கும் மாற்றிக் கொண்டிருந்தார்கள்.
எந்தவொரு சட்டத்தரணியையோ மனித உரிமை செயற்பாட்டாளரையோ என்னிடம் அனுமதிக்கவில்லை.
21 ஆம் திகதி, நவகமுவ தேவாலயத்திற்கு அருகிலுள்ள வரண்ட நிதிக்கரைக்கு அழைத்துச் சென்று, என்னை துணிகளால் சுற்றி, கைகளில் விலங்கை மாட்டி, துப்பாக்கியை ஏந்தி என்னை சூழ்ந்துக் கொண்டார்கள்.
அப்போது தொலைப்பேசியை அழைப்பை பாதுகாப்பு அதிகாரிக்கு மேற்கொண்ட பொலிஸார், சேர் தற்போது நாம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என கேட்டார்கள்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வாகனமொன்று நவகமுக தேவாலய வாகனத்தரிப்பிடத்தில் இருப்பதைப் பார்த்து, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் எம்மை நோக்கி வருவதைக் கண்ட, இவர்கள் உடனாயாக எம்மை அங்கிருந்து கூட்டிச் சென்றார்கள்.
அதாவது, நவகமுவ பொலிஸாருக்குக்கூட இந்தத் திட்டம் குறித்து தெரிந்திருக்கவில்லை.
கடந்த காலங்களில் பாதாளக்குழுவின் பிரதானிகள், விசேடமாக மாகந்துர மதூஸ் உள்ளிட்டவர்களை இப்படித்தான் நாம் கொலை செய்தோம் என குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
சி.சி.டி.வி. இல்லாத இடமாக தேடிச் சென்று, இவ்வாறுதான் கொலை செய்தோம் என்று கூறினார்கள்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்ட என்னை, நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்தாமல், 72 மணித்தியாலங்கள் எம்மை தடுத்து வைத்திருந்தார்கள்.
பொலிஸ் மா அதிபர், பேலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும்.
நவகமுவ தேவாய வாகனத்தரிப்பிடம், கரையொர பொலிஸ் நிலைய குடியிருப்புத் தொகுதியின் கீழ் மாடி, என்டேரமுல்ல பொலிஸ் நிலைய பின்புறம் உள்ளிட்டவை விசாரணைக்கூடங்களா?
இவற்றுக்கு கைதிகளை அழைத்துச் செல்ல பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன? இது மிகவும் திட்டமிடப்பட்டு செய்த ஒரு காரியமாகும்.
அதேநேரம், பல பொலிஸ் சகோதரர்கள் எம்மை பல வழிகளில் பாதுகாத்தார்கள். இதனால்தான் நாம் இன்றும் உயிருடன் இருக்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் தேவைக்காகத் தான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு செயற்பட்டு வருகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் முழுமையாக இல்லாது செய்ய வேண்டும். அரசியல்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி பொய் வழக்குளால் சிறையில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். அதுவரை எமது இந்தப் போராட்டம் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும்.
கருணா அம்மாள், பிள்ளையான் போன்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் இன்று அரசாஙத்தின் மடியில் அமர்ந்துக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்து வருகிறார்கள்.
ஆனால், இவர்கள் ஊடாக அடையாள அட்டையை பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக, இன்னமும் தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருந்துக் கொண்டிருக்கிறார்கள். இது மனித உரிமை மீறல் இல்லையா?
பயங்கரவாத் தடைச்சட்டத்தை நீக்கி விட்டோம் என்ற போர்வையில், இதே சரத்துக்களுடன் வேறு பெயரில் சட்டமொன்றை கொண்டுவர முயற்சித்தால், நாம் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.