இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு கொட்டகலையில் அடிக்கல் நாட்டு வைக்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீமத் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜீ மஹாராஜ் தலைமையில் கொட்டகலை ஹரிங்டன் தோட்டத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷணர் பூஜை, ஹோமம், ஆரதி, பஜனை, ஆகியன இடம்பெற்று அடிக்கல் நாட்டும் வைபவம் ஆரம்பமாகியது.
இதன் போது பிரதம அதிதிகள் மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க கலை, கலாசார அம்சங்களுடன் வரவேட்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வின் போது இராமகிருஸ்ண மிஷனுக்கு ஸ்ரீமான் விஜயபாலன் ரெட்டியார் அவர்களால் இரண்டு ஏக்கர் காணி வழங்கப்பட்டதுடன் அதிதிகள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டன.
இராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளை நூற்றாண்டு நோக்கிய தனது ஆன்மீகமும் சமூக சேவையினையும் என்னும் சுவாமி விவேகானந்தரின் அடியொட்டிய பயணத்தில் கடந்த 96 ஆண்டுகளாக பெரும் பங்கினை ஆற்றி வருகிறது.
இராமகிருஷ்ண மிஷன் தனது சேவைப் பணிகளை விரிவுபடுத்தும் அடுத்த கட்ட நிகழ்வாக, ஈழ தேசத்தின் செழுமைமிக்க நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில், மலையக மக்களின் மேம்பாட்டுத்தினை முன்னெடுக்கும் வகையில் புதிய நலன்புரி நிலையம் உருவாக்கு தீர்மானித்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகரலாயத்தின் இந்திய உதவி தூதுவர் கலாநிதி ஆதிரா, சங்கைக்குரிய திஸ்ஸமாராம தம்மஜோதி தேரர், ஸ்ரீமத் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜீ மஹாராஜ், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹாராஜ், மட்டகளப்பு ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ, இராமகிருஷ்ண தலைவர் உள்ளிட்ட சுவாமிகள், மதகுருமார்கள் சமூகவியலாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.