வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுகஸ்தோட்டை, கண்டி மற்றும் குண்டசாலையை மையமாகக் கொண்ட விசேட அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை, கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு, மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், நகர திட்டமிடல் துறை அறிஞர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இக்குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்றிரவு (19) வீதி உலா வந்த “குடியரசு பெரஹரா” நிறைவடைந்ததை அடுத்து இன்று (20) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.