பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற, வரலாற்று பிரசித்திபெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது.
திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்று, காலை 6.30 மணிக்கு ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்றைய திருவிழா திருப்பலி, கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்தந்தை அண்ரன் தில்லைநாயகம் மற்றும் யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வருடம் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் 2800 இலங்கை பக்தர்களும், 2100 இந்திய பக்தர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.