கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட நட்புரீதியான கட்டளையில் இந்த சம்பவத்தை செய்ததாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இருவரே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அனலைதீவில் வீடுபுகுந்த வன்முறைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட மூவரை கடுமையாகத் தாக்கி 13 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றனர்.
சம்பவத்தில் கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் சுப்ரமணியம் (குருசாமி வயது 75) என்பவர் கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கனடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தொடர்ந்து மேலதிக விசாரணைகளில் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 வயதுடைய முதன்மை சந்தேக நபர் மற்றும் 24 வயதுடையவர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.