பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை திருத்தி அமைக்கும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் அவசியம் என மாற்றுக் கொள்கைளுக்கான மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இச்சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதம் என்ற வரையறை, தடுப்புக்காவல் உத்தரவுகள், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மிதமிஞ்சிய அதிகாரங்கள் மற்றும் அதிகரித்த இராணுவமயமாக்கல் என்பன அதிக கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளதாக மாற்றுக் கொள்கைளுக்கான மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே அனைத்துத்தரப்பினருடனான கலந்துரையாடலுடன், வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால சட்டமறுசீரமைப்புச் செயன்முறைகளுக்கு அவசியமான சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயார் என்றும் அறிவித்துள்ளது.
அத்தோடு தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் காணப்படும் கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிருக்கும் மாற்றுக் கொள்கைளுக்கான மத்திய நிலையம், எதிர்வரும் காலங்களில் தயாரிக்கப்படும் சட்டவரைபுகளில் இவ்விடயங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.